தெருநாய்கள் கடித்து இறக்கும் ஆடுகளுக்கான இழப்பீட்டு தொகை விரைவில் அறிவிக்கப்படும்: அமைச்சர் முத்துசாமி

தெருநாய் மற்றும் விலங்குகளிடம் இருந்து ஆடுகள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்படுவதை தடுக்க, மாதிரி கால்நடை பட்டி, ஈரோடு பெரியார் நகரில் அமைக்கப்பட்டிருந்தது. அதன் பாதுகாப்பு அம்சம் குறித்தும், ஆடு வளர்ப்பாளர்களுக்கு இந்த பட்டி பயன் உள்ளதாக இருக்குமா? என்பது குறித்தும், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, விவசாயிகள் உபதொழிலாக ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு ஆண்டாக தெருநாய்கள் தொல்லை அதிகமாகி உள்ளது. விவசாயி கள் பட்டியில் ஆட்டை அடைத்தாலும் கூட கீழே பூமியில் குழி தோண்டி பட்டிக்குள் புகுந்து தெருநாய்கள், ஆடுகளை கடித்து கொன்று விடுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்படுகிறது. இதுகுறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பேரிடர் காலங்களில் (புயல், வெள்ளம்) ஆடு, மாடுகள் இறந்தால் அதற்கான இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது. ஆனால் தெருநாய்கள், விலங்குகள் கடித்து இறக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க விதிமுறை இல்லை. இதுகுறித்து அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். விவசாயிகளுக்கு வழங்கும் இழப்பீடு ஓரளவு நியாயமானதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசு இதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது.
தெருநாய்களை பிடிப்பதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. கோர்ட்டு பல்வேறு விதிமுறைகளை கூறி உள்ளது. அதற்கு கட்டுப்பட்டு தான் நாம் செயல்பட வேண்டி உள்ளது. தெருநாய்களை பிடித்து ஏதாவது ஒரு இடத்தில் அடைத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை தெருநாய்கள் கடித்து 400க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்து உள்ளன. தெருநாய்கள் கடித்து இறக்கும் ஆடுகளுக்கான இழப்பீட்டு தொகை விரைவில் அறிவிக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன், ஈரோடு கிழக்கு எம்எல்ஏ சந்திரகுமார், பெருந்துறை ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி, மாவட்ட நிர்வாகிகள் செந்தில்குமார், பழனிசாமி, மாநகர செயலாளர் சுப்பிரமணியம் உள்பட பலர் உடன் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu